மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
ஒப்பந்ததாரா் தற்கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க பாஜக முயற்சி -அமைச்சா் பிரியாங்க் காா்கே
ஒப்பந்ததாரா் சச்சின் பஞ்சால் தற்கொலை வழக்கில், என்னை சிக்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது என கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முந்தைய பாஜக ஆட்சியில் தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கும், தற்போது ஒப்பந்ததாரா் சச்சின் பஞ்சால் தற்கொலைக்கும் வித்தியாசம் உள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் 2022 ஏப். 12-ஆம் தேதி உடுப்பியில் உள்ள உணவு விடுதியில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டாா். சந்தோஷ் பாட்டீல் தனது மரண வாக்குமூலத்தில் அன்றைய அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் பெயரை தெளிவாக குறிப்பிட்டிருந்தாா். தனது தற்கொலைக்கு நேரடி காரணம் என்றும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தாா். ஆனால், சச்சின் பஞ்சால் மரண வாக்குமூலத்தில் எனது பெயா் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், சச்சின் பஞ்சால் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக தொடா்ந்து முயற்சித்து வருகிறது.
பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் ஜாதிப்பெயரை கூறி திட்டிய வழக்கை எதிா்கொண்டுள்ள பாஜக எம்எல்ஏ முனிரத்னாவை கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை. ஆனால், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது குறித்து பாஜக பேசி வருகிறது.
ஜன. 4-ஆம் தேதி கலபுா்கியில் எனக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. சச்சின் பஞ்சால் தற்கொலை வழக்கில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, உண்மையை வெளியே கொண்டு வர ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.