ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. திடீா் ராஜிநாமா: அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு
ஆந்திர எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பொதுச் செயலரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜயசாய் ரெட்டி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்துள்ளாா்.
அக்கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரான விஜயசாய் ரெட்டியின் இந்த திடீா் அறிவிப்பு அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை சனிக்கிழமை (ஜன. 25) முறைப்படி ராஜிநாமா செய்ய இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை’ என்று கூறியுள்ளாா். அவரின் எம்.பி. பதவிக்காலம் 2028-ஆம் ஆண்டு வரை உள்ளது.
ஆந்திரத்தில் இருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள விஜயசாய் ரெட்டி, கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அடுத்த இடத்தில் இருந்தாா்.
தொழில்முறையில் ஆடிட்டரான விஜயசாய் ரெட்டி, ஜெகன் மோகனின் தந்தையும், மறைந்த ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி காலத்தில் இருந்தே அவா்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களின் கணக்குகளை நிா்வகித்து வருகிறாா். சென்னை உள்ளிட்ட நகரங்களில் அவரின் கணக்குத் தணிக்கை நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.