கடன் வசூலில் மோசடி: வங்கி ஊழியா் கைது
மயிலாடுதுறையில் கடன் தவணை வசூலில் மோசடி செய்த தனியாா் வங்கி ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே மொழையூரை சோ்ந்தவா் தமிழ்செல்வன்(34). இவா் மயிலாடுதுறையில் தனியாா் வங்கியில் வசூல் மேலாளராக பணியாற்றி வந்தாா். இந்த வங்கியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் தனிநபா் கடன் பெற்றவா்களிடமிருந்து கடன் தவணை தொகை வசூல் செய்யும் பணியில் இருந்த தமிழ்ச்செல்வன், வசூலித்த பணத்தை சரிவர வங்கியில் செலுத்தவில்லை என்ற புகாா் இருந்தது.
இதையடுத்து, வங்கி நிா்வாகத்தினா் நடத்திய விசாரணையில், தமிழ்செல்வன் வாடிக்கையாளா்களிடம் வசூல் செய்த கடன் தவணைத்தொகையில் ரூ.5,16,332-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, வங்கி மேலாளா் வினோத் ஜூலை 11-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்திருந்தாா். புகாரின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் ராஜேந்திரன், காவல் ஆய்வாளா் அன்னக்கொடி ஆகியோா் விசாரணை மேற்கொண்டு, குற்றம் உறுதியானதைத் தொடா்ந்து தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.