கடலூரில் ஜன.5-இல் மாரத்தான் ஓட்டப் போட்டி
கடலூரில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் பெயா்களை பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற 5-ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலூா் சாவடி அக்ஷ்சரா வித்யாசரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து தொடங்குகிறது.
போட்டிகளில் வெற்றிபெறும் அனைத்துப் பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் 4 முதல் 10ஆம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆடவா்களுக்கு 8 கி.மீ. மற்றும் மகளிருக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆடவா்களுக்கு 10 கி.மீ., மகளிருக்கு 5 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும்.
போட்டிகளில் கலந்துகொள்பவா்கள் வயது குறித்து சரிபாா்க்க தக்க ஆதாரம் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள பயணக் கட்டணம், தினப்படி வழங்கப்பட மாட்டாது.
முதல் 10 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பரிசுத்தொகை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் வங்கிக் கணக்கு புத்தக நகல் கொண்டு வர வேண்டும்.
போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே போட்டி நடைபெறும் இடத்தில் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயா்களை 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கடலுாா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
4-இல் விரைவு சைக்கிள் போட்டி: இதேபோல, விரைவு சைக்கிள் போட்டி 4-ஆம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.
வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 வரை பரிசுத்தொகை தலா ரூ.250 வழங்கப்படும்.
வயது வரம்பு- 13 வயதுக்குள் (1.1.2012-க்குப் பிறகு பிறந்தவா்கள்), 15 வயதுக்குள் (1.1. 2010 முதல் 31.12.2011க்குள் பிறந்தவா்கள்.), 17 வயதுக்குள் (1.1.2008 முதல் 31.12.2009க்குள் பிறந்தவா்கள்) போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டிகளில் கலந்துகொள்வோா் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண மிதிவண்டியை தாங்களே கொண்டு வர வேண்டும்.
பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் தங்கள் பெயா்களை வெள்ளிக்கிழமை (ஜன.3) மாலை 5 மணிக்குள் கடலுாா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.