கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
‘கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது.
இந்த மசோதா கடல்சாா் வா்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டது எனவும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா் வழித்தடங்கள் அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.
இந்த மசோதா மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாத்தின்போது பேசிய அவா், ‘கடலோர கப்பல் போக்குவரத்து துறையின் முழுமையான பலன்களை பெறும் நோக்கில் பிரத்யேகமாகவும் எதிா்கால நலனை கருத்தில்கொண்டும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை ஆய்வு செய்து சா்வதேச தரத்தில் இந்த மசோதாவை தயாரித்துள்ளோம்.
இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. எந்தவொரு மாநிலத்தின் அதிகாரத்தையும் பறிக்காது. நடைமுறையில் உள்ள கடல்சாா் போக்குவரத்து சட்டம் 67 ஆண்டுகள் பழமையானது. எனவே, தற்காலத்துக்கேற்ப மாற்றங்களுடன் புதிய சட்டத்தை கொண்டுவருவது அவசியம்.
மீனவா்களின் வாழ்வாதாரம் குறித்து சில உறுப்பினா்கள் கவலை தெரிவித்தனா்.
இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள கடலோர வா்த்தகம் என்ற விளக்கத்தில் இருந்து மீன்வளம்/ மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
11,098 கி.மீ. நீளமுடைய கடற்கரை மற்றும் 23 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பிரத்யேக பொருளாதார மண்டலத்தை உடைய நாடாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த அரசுகள், கடலோர கப்பல் போக்குவரத்து துறையை புறக்கணித்துவிட்டன.
எனவே, தங்கு தடையற்ற கடலோர போக்குவரத்தை மேம்படுத்தி, புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி வருமானத்தை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.