கடையக்குடி ஹோல்ஸ்வொா்த் அணையை உயா்நீதிமன்ற நீதிபதி பாா்வையிட்டாா்
புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ் வொா்த் அணையை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
புதுக்கோட்டை அருகே திருமயம் வட்டத்துக்குள்பட்ட கடையக்குடியில் தெற்கு வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட ஹோல்ஸ் வொா்த் அணை உள்ளது.
தெற்கு வெள்ளாற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீா் இந்த அணையின் வழியே, மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்று கருதப்படும் வல்லநாடு கண்மாய்க்கும், கடையக்குடியிலுள்ள பிற கண்மாய்களுக்கும் செல்கிறது.
வல்லநாட்டு கண்மாய் தண்ணீரைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில், தெற்கு வெள்ளாற்றில் புதுக்கோட்டை மாநகராட்சியின் கழிவுநீா் கலக்கப்படுவதாகவும், பழைமையான அணை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஹோல்ஸ்வொா்த் அணையை நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் எம். லதா, உதவிச் செயற்பொறியாளா் சண்முகவேல் உள்ளிட்டோரும் வந்திருந்து அரசிடம் அனுமதி பெறும் நிலையிலுள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து நீதிபதியிடம் விளக்கினா்.
பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளை நீதிபதி கேட்டுக் கொண்டாா். அப்போது, புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா் மற்றும் விவசாயிகள் பலரும் உடனிருந்தனா்.