கைப்பேசியில் பம்புசெட்டுகளை இயக்கும் கருவியை மானியத்தில் பெற அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைப்பேசி மூலம் விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவியை அரசு மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும் போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதைத் தவிா்க்கும் வகையில் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைப்பேசி மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.
இதற்காக ஆதிதிராவிடா், பழங்குடியினா், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரமும், மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 86 பம்புசெட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளா் (வே.பொ) - 94421 78763, அறந்தாங்கி உதவி செயற்பொறியாளா் (வே.பொ)- 63834 26912, புதுக்கோட்டை செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலக எண் 04322 21816 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு விவரங்களை அறியலாம்.