எங்களுக்கு ஐயா ஐயாதான்: அன்புமணி விளக்கம்
விழுப்புரம்: பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்ட மேடையில் அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற சமரச போச்சுவார்த்தைக்கு பின்னர், எங்களுக்கு ஐயா ஐயாதான். எங்கள் உள்கட்சி பிரச்னையை பற்றி நீங்கள் பேசத் தேவையில்லை என அன்புமணி தெரிவித்தார்.
பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் பட்டனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் பரசுராமன் முகுந்ததனை நியமிப்பதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு மேடையிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுக்கும் , அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்றது.
கட்சியின் கெளரவத் தலைவர் கோ. க மணி, நிலையச் செயலர் அன்பழகன், வன்னியர் சங்க செயலர் கார்த்தி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
தைலாபுரம் தோட்ட இல்லத்தில் 1 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
ராமதாஸுடன் அன்புமணி சமரச பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில் இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தன் நியமனத்தில் இதுவரை மாற்றமில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க:விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம்: முதல்வர்
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
பாமக நிறுவனர் ராமதாஸுடன் கட்சி வளர்ச்சி குறித்து பேசினோம். 2026 பேரவைத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோன். பாமக ஒரு ஜனநாயக கட்சி.
ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா ஐயாதான்.
இன்றைக்கு ஐயாகிட்ட நாங்க பேசிகிட்டு இருக்கிறோம். எங்கள் கட்சியின் உள்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் பேசுவதற்கு எதுவும் தேவையில்லை. எங்கள் உள்கட்சி பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நன்றி வணக்கம் என தெரிவித்துவிட்டு அன்புமணி புறப்பட்டு சென்றார்.
ராமதாஸ்-அன்புமணி இடையே பிரச்னை இல்லை
இதனிடையே, செய்தியாளர்களுடன் பேசிய பாமக பேரவை உறுப்பினர் அருள், ராமதாஸ் - அன்புமணி இடையே எந்த பிரச்னையும் இல்லை. கருத்து பரிமாற்றத்தை முரண்பாடு என்று சொல்ல முடியாது. பாமகவில் எந்த கருத்து மோதலும் இல்லை. இருவரையும் ஒன்றாக பார்க்கிறோம் என கூறினார்.