கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே ப...
கோயில்கள் நிறைந்த மொரிஷியஸ் பயண அனுபவம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஓர் அழகிய தீவு நாடு தான் மொரிஷியஸ் (Mauritius). இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது. இந்தத் தீவு நீண்டகாலமாக அறியப்படாததாகவும், மக்கள் வசிக்காததாகவும் இருந்தது.
1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் முதன் முதலில் மொரிஷியஸுக்கு வந்தனர். .
பிரெஞ்சு காலனியாக இருந்தபோது இங்கு வேலைக்கு அழைத்து வரப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் இந்துக்கள். 1835 ஆம் ஆண்டு முதல் பல இந்தியர்கள் மொரிஷியஸில் குடியேறி, அதைத் தங்கள் தாயகமாக மாற்றிக்கொண்டனர்.
மொரிஷியஸின் மொத்த பரப்பளவு 2040 சதுர கிலோ மீட்டர் தான். இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 12.6 லட்சமாகும். அதில் ஏறத்தாழ அனைவரும் இந்து சமயத்தினர். அரசுக் கணக்கெடுப்பின்படி, தமிழ் இந்துக்கள் 75,000 பேர்.
இந்த நாட்டில் 80 சதவிகிதம் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் சர்க்கரை சார்ந்த பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு மீன் பிடிக்கும் தொழிலும் முக்கியமான ஒன்று.
பல வருடங்களுக்கு முன் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட பறவையான டோடோ இந்நாட்டின் மிகவும் முக்கியம் வாய்ந்த பறவையாகும். அழிந்து விட்ட டோடோவின் உருவ சிலைகளை எல்லா இடங்களிலும் காணலாம்..
மொரிஷியஸின் தெளிவான கடற்கரைகள், கடற்கரை சாகசங்கள், கோயில்கள் மற்றும் மயக்கும் இடங்களைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். சமீபத்தில் நாங்களும் 7 நாள்கள் சுற்றுலா பயணமாக இந்த அழகிய தீவு நாட்டுக்குச் சென்றோம். இங்குள்ள சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையில் இறங்கும் போதே சுற்றிலும் மொரிஷியஸின் இயற்கை அழகு நம்மை மயக்குகிறது.
நாங்கள் தங்கியிருந்தது ஹோட்டல் Radisson Blu Poste Lafayette Resort. முதல் நாள் முழுவதும் ஓய்வு, எங்கள் அறையிலிருந்தே தெரிந்த கடலின் அழகை ரசித்தபடியே ஓய்வெடுத்தோம். ஹோட்டல் ஊழியர்களின் உபசரிப்பு மிகுந்த பணிவன்புடன் இருந்தது. குறிப்பாக மேனேஜர் Vishal Seeborun மிகக் கனிவுடன் அனைவரையும் உபசரிக்கிறார்.
இரண்டாவது நாள் Floreal என்ற இடத்தில் உள்ள டைமண்ட் தொழிற்சாலை மற்றும் அருகிலேயே உள்ள கப்பல் மாதிரி தொழிற்சாலைக்கும் சென்றோம். அங்கு கப்பல் பற்றிய நுணுக்கமான விவரங்களை விளக்கமாகக் கூறினார்கள். பின் அங்கிருந்து 23 வண்ண பூமியின் பள்ளத்தாக்கு நீர்வீழ்ச்சிகளுடன் உள்ள அழகிய காட்டுப் பகுதிக்குச் சென்றோம்.
உள்ளே செல்ல காரில் அழைத்துச் செல்கின்றனர். கார் கட்டணம் சற்று அதிகம் தான். அங்கு பல வண்ணங்களுடன் ஜொலித்த பள்ளத்தாக்கு மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கண்டு களித்தோம். குவாட் பைக்கிங், ஜிப் லைனிங் போன்றவற்றையும் அனுபவிக்கலாம்.
கங்கா தலாவ் கோயில்
கிராண்ட் பாசின் என்றும் அழைக்கப்படும் கங்கா தலாவ், கடல் மட்டத்திலிருந்து சுமார் 550 மீட்டர் உயரத்தில் மொரிஷியஸின் தெற்கில் சவண்ணே மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரிகள் சூழ்ந்த கோயில். இங்குள்ள 108 அடி உயரமான துர்காதேவி மற்றும் சிவன் சிலை கண்ணைக் கவருகிறது.. அனைவரையும் ஈர்க்கக்கூடிய இங்குள்ள சிலைகள் 2007 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டனவாம். நாங்கள் அங்கு சென்றபோது சிறிது மழை பெய்து கொண்டிருந்தது. சிவலிங்க அபிஷேகம் செய்து வணங்கினோம்.
மூன்றாம் நாள் குவான் ஃபூ தேயிலை தொழிற்சாலை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அப்ரவாசி (Aapravasi Ghat) படித்துறைக்குச் சென்றோம். போகும் வழியில் குதிரைப் பந்தய மைதானம், போர்ட் லூயிஸ் தியேட்டர், கவர்ன்மென்ட் ஹவுஸ் எனப் பல இடங்களைப் பார்த்தவாறே சென்றோம்.
நான்காம் நாள் மொரிஷியஸ் கோயில்களுக்கு சென்று வணங்கினோம்.
சாகர் சிவன் கோவில்
இது Goyave de Chine தீவில் உள்ள ஒரு அற்புதமான மொரிஷியஸ் இந்து கோயில். அனைத்து பக்கங்களிலும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்ட சாகர் சிவன் கோயில் சிவபெருமானின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், பார்வதி, சாய்பாபா என அநேக தெய்வங்களின் சிலைகள் உள்ளன. மிகவும் அமைதியான இடம்.
அருள்மிகு மஹா மாரியம்மன் திருக்கோயில்
போனா அகேல் என்ற இடத்தில் உள்ள இந்த மாரியம்மன் கோயில் மதுரை மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தியது. கருவறையில் அம்மன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். கோயில் வளாகத்தில் இடும்பன், கடம்பன், முனீஸ்வரன், மதுரை மருத வீரன், பீமனின் பேரன் பார்பரிகா போன்ற காணக்கிடைக்காத உருவ சிலைகள் உள்ளன. மேலும் பல தெய்வங்களின் பெரிய உருவ சிலைகளும் காணப்படுகின்றன. தைபூச தினத்தன்று சிறப்பு பூஜைகள், தீமிதி, காவடி போன்ற விஷேச நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா ஆலயம், சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஆலயம், திரௌபதி அம்மன் ஆலயம் என இன்னும் பல இந்து ஆலயங்கள் உள்ளன. மொரிஷியஸில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்துவதால் தீபாவளி, விநாயக சதுர்த்தி, ஹோலி, மகர சங்கராந்தி மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட அனைத்து முக்கிய இந்து பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன.
இங்கு தமிழ்ப் பெயர்களை சூட்டும் வழக்கம் உள்ளது. சுப்பிரமணி, பொன்னுசாமி, முத்தையன் ஆகிய பெயர்கள் அதிகம் காணப்படுகின்றன. பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் குறைந்தளவினரே தமிழ் பேசுகின்றனர்
இங்கு இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் ஆகிய மதங்கள் உள்ளன. மொழிகளை பொறுத்தவரை தமிழ், போஜ்புரி, உருது, மொரிஷியஸ், கிரியோல் உள்ளிட்டவை பேசப்படுகின்றன.
தமிழர்கள் திறமை வாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக மொரிஷியஸ் அரசு, மொரிஷியஸ் ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுகிறது.
கடைசி நாளன்று ஷாப்பிங் செய்தோம். பிரபல தெரு உணவான டோல் பூரியை சுவைத்தோம். பூரிக்குள் வேக வைத்த பட்டாணியை வைத்துத் தருகிறார்கள். எல்லா இடங்களிலும் இந்திய உணவு கிடைக்கிறது.
அழகான கடற்கரைகள், அருவிகள், காடுகள், மலைகள் பசுமையான இடங்கள், ஆலயங்கள், கடலில் சாகச விளையாட்டுகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மொரிஷியஸ் ஒரு சொர்க்க பூமியே!
-வி.ரத்தினா
ஹைதராபாத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...