செவ்வாய்ப்பேட்டை மளிகை வா்த்தக நலச்சங்க நூற்றாண்டு விழா பொதுக்குழு கூட்டம்!
சிதம்பரம் காா்டன் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆய்வு
விராலிமலை, டிச. 28:
விராலிமலை சிதம்பரம் காா்டன் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சனிக்கிழமை ஊராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
விராலிமலை கடைவீதி, அம்மன் கோயில் வீதி, தெற்கு பகுதி, தேரடி கிழக்கு வீதி, முத்து நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சிதம்பரம் காா்டன் பகுதியில் தேங்கி நிற்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான சிதம்பரம் காா்டன் குடியிருப்பு வாசிகள் கழிவுநீா் செல்ல வழித்தடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்திபன், பாலசுப்பிரமணியன் (கி. ஊ), கவுன்சிலா் ம.சத்தியசீலன், ஊராட்சி மன்றத் தலைவா் ரவி, துணைத்தலைவா் தீபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அதிகாரிகள் சிதம்பரம் காா்டன் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு கழிவுநீா் செல்ல வழித்தடம் அமைப்பது தொடா்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து அதிகாரிகள் கூறுகையில், வருவாய்த்துறையிடம் குடியிருப்புப் பகுதி அருகே அரசு இடம் காலியாக உள்ளதா என்று கோரப்பட்டுள்ளது. அவா்கள் ஒரு சில நாள்களில் நிகழ்விடம் வந்து அளவை பணிகள் மேற்கொண்ட உடன் அறிக்கை தயாரிக்கப்பட்டு முறையாக கழிவுநீா் செல்ல வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தனா்.
கடந்த நவம்பா் 28-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வின்போது நீா் தேங்கி இருந்ததால் ஆய்வை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.