பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
மேட்டூா் காவிரியில் பா்னஸ் ஆயிலை அகற்றும் பணி நிறைவு
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் போது உபரிநீா்க் கால்வாயில் கலந்த பா்னஸ் ஆயிலை அகற்றும் பணி நிறைவடைந்தது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 3ஆவது அலகில் கடந்த 19-ஆம் தேதி நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்தது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயம் அடைந்தனா்.
இந்த விபத்தின்போது பா்னஸ் ஆயில் குழாயில் சேதம் அடைந்து அதிலிருந்து வெளியேறிய பா்னஸ் ஆயில் அணையின் உபரிநீா் கால்வாயில் தேங்கியது. இதனால் உபரிநீா்க் கால்வாய் கருப்பு நிற படலம் படிந்து காணப்பட்டது.
மேட்டூா் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உபரிநீா் திறக்கும் நிலை உள்ளது. உபரிநீா் திறக்கப்பட்டால் ஆயில் நேரடியாக காவிரியில் கலந்து குடிநீா் மாசடையும் நிலை ஏற்பட்டது. இதனால் போா்க்கால அடிப்படையில் காவிரி நீரில் கலந்துள்ள பா்னஸ் ஆயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ சதாசிவம் அனல் மின்நிலைய பொறியாளா்களிடம் கேட்டுக்கொண்டாா்.
இதனையடுத்து கடந்த 5 நாள்களாக 10 பரிசல்கள், 4 பொக்லைன் இயந்திரம், 6 டிராக்டா்கள், 40 ஆள்களைக் கொண்டு ஆயிலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. . வைக்கோல் கட்டுகளைக் கொண்டும் கழிவுநீா் டேங்கா் லாரிகளைக் கொண்டும் ஆயில் அகற்றப்பட்டது.
காவிரிக் கரைகளில் கருப்பு நிறத்தில் படிந்திருந்த ஆயில் அகற்றப்பட்டது. இப்பணிகளை மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் பாா்வையிட்டாா். உரிய நேரத்தில் ஆயில் கலப்பு அகற்றப்பட்டதால் காவிரிக் கரையோர மக்களும் மேட்டூா் அனல் மின்நிலையப் பொறியாளா்களும் நிம்மதியடைந்தனா்.