ஐஎஸ்ஐ முத்திரை குத்திய அமைதி..! யுவன் குறித்து விஷ்ணு வரதன்!
கண்ணூர்: பள்ளிப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து -ஒரு குழந்தை பலி!
கண்ணூர்: கேரளத்தின் கண்ணூர் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் அதிலிருந்த ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூரின் செங்கலாயி பஞ்சாயத்துக்கு உள்பட்ட வலக்கையில் தாலிப்பறம்பா - இரிட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று இன்று(ஜன. 1) மாலை 4 மணியளவில் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில், பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், பேருந்திலிருந்த 18 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், பிரேக் பிடிக்காமல் போனதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பேருந்து வந்த வேகத்தில் சட்டென சரிந்து விழும் காட்சிகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன.