எச்எம்பிவி தொற்று: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கேஜரிவால் வலியுறுத்தல்!
"உடலுக்கு நன்மை தரக்கூடிய 100 வகை உணவு" - களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி
தஞ்சாவூரில் அவள் விகடன் சார்பில் தொடங்கிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் `முள்ளு முருங்கை' தோசை, `த்ரீ கலர்' சப்பாத்தி, நெல்லிக்காய் சாதம், மாட்டன் கோலா என வித விதமான உணவுகளுடன் போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் கல்லூரியில் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களுடன், சமையலில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என ஆண்களும் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் செஃப் தீனா, பாரத் கல்வி குழுமத்தின் சேர்மன் புனிதா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் குத்து விளக்கேற்றி போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இதில் பேசிய புனிதா கணேசன், "ஒவ்வொரு ஊரு தண்ணீருக்கும் தனி சுவை இருக்கும். அந்த ஊரில் உணவு சுவையாக இருப்பதற்கு அந்த தண்ணீரும் ஒரு வகை காரணம். சோழநாட்டின் உணவு சுவையாக இருப்பதற்கும், மணப்பதற்கும் காவிரி தண்ணீரின் பங்கும் காரணம். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற சோழ நாட்டில், தென் தமிழ் நாட்டில் கேட்டரிங்குக்காக தொடங்கப்பட்ட எங்களுடைய முதல் கல்லூரியில் அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடைபெறுவதில் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.
பின்னர் பேசிய செஃப் தீனா, "நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக்கூடாது" என கோரிக்கை வைத்தார். இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
தாங்கள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, ஒவ்வொருவராக சென்று அந்த உணவை டேஸ்ட் செய்தார். கவிதா என்பவர் மட்டும் 21 வகையான உணவுகளுடன் போட்டியில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார். சிறு குறிஞ்சி சூப், இனிப்பு வடை, மோர்க் களி, சிங்கி இறால் புட்டு, சுரைக்காய் நண்டு பிரட்டல் என வகை வகையான, சுவையான உணவுகளுடன் உற்ச்சாகமாக பெண்கள் போட்டியில் பங்கெடுத்ததால் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி களைக்கட்டியது.