வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
Volkswagen: இந்தக் காரை இந்தச் சில விஷயங்களுக்காகவே வாங்கலாம் - அது என்ன?
பொதுவாக, ஃபோக்ஸ்வாகன் கார்களைப் பற்றி ஒரே ஒரு விஷயத்தில்தான் மக்கள் தயங்குவார்கள். அது விலை! ஆனால், ‛அந்த விலைக்கேற்ற தரமா ஃபோக்ஸ்வாகன் கார்கள்’ என்றால், ‛ஆம்’ என்கிற பதில்தான் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வாகனில் டைகூன் என்றொரு எஸ்யூவி இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, கியா செல்ட்டோஸ் போன்ற மிட்சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன் டைகூன்.
நீங்கள் 1.5 TSI, 1.0 TSI என எதை எடுத்துக் கொண்டாலும் சரி; அதிலேயே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் என எதை எடுத்துக் கொண்டாலும் சரி - இந்தக் காரை ஓட்டினால் நீங்கள் 2 விஷயங்களில் செம நம்பிக்கையாக இருக்கலாம். Fun to Drive… அப்புறம் இதன் ஸ்டெபிலிட்டி. இதற்குக் காரணம், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் நல்ல ரிஃபைண்டு செய்யப்பட்ட இன்ஜின். ஸ்டெபிலிட்டி என்றால், நிலைத்தன்மை. ஐரோப்பியன் கார்களை ஓட்டும்போது நிலைத்தன்மையில் சந்தேகமே படத் தேவையில்லை. காரணம், இதன் பில்டு குவாலிட்டியும், தரமும்! இது தவிர, இந்தச் சில காரணங்களுக்காகவே ஃபோக்ஸ்வாகன் கார்களை வாங்கலாம்; அதுவும் டைகூனை!
முதல் காரணம் - இது ஒரு 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார். அதாவது - குளோபல் என்கேப் எனும் க்ராஷ் டெஸ்ட்டில், பாதுகாப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட டெஸ்ட்டிங்கில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய ஒரு காரின் பாதுகாப்பைச் சந்தேகப்படத் தேவையே இல்லை. அந்தளவு கிண்ணென்ற கட்டுமானமும், பாதுகாப்பு சமாச்சாரங்களும் டைகூனில் நச்!
டைகூனில் ஹைஸ்பீடு ஸ்டெபிலிட்டியை பெர்சனலாகவே சோதனை செய்த அனுபவம் எனக்குண்டு. ஒருமுறை - பெங்களூருவில் இருந்து கோவா வரை வெறும் 9 மணி நேரங்களில் ஜாலியாகப் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. இதை ஃபன் டு டிரைவ் என்பார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இதன் உறுதியான இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், நேர்கோட்டில் ஆடாமல் அசையாமல் காற்றைக் கிழித்துச் செல்லும் இதன் டைனமிக்ஸ், எத்தனை வேகத்தில் பறந்தாலும் இன்ஜின் திணறலோ - வேறெந்தச் சத்தமோ ஏற்படுத்தித் தொந்தரவு செய்யாத இதன் படுசுத்தமான NVH லெவல், வளைவுகளில் பாடி ரோல் ஏற்படுத்திப் பயமுறுத்தாத இதன் ஓவர்ஹேங் டிசைன் என்று பட்டையைக் கிளப்புகிறது இந்த டைகூன். இது போலோவை விட 30% ஸ்டிஃப்னெஸ் அதிகமாக இருப்பதால், நெடுஞ்சாலை நிலைத்தன்மை கூடுகிறது டைகூனில்.
‛ஆளு பார்க்கத்தான் பொறி உருண்டை மாதிரி இருக்காப்புல’ என்றொரு டயலாக் வரும். அதுபோல் பார்க்க சாந்தமாக இருந்தாலும், இதன் இன்ஜின் பெர்ஃபாமன்ஸும் ஸ்மூத்னெஸ்ஸும் ரவுடித்தனம் செய்கிறது. இதன் 1.5 லிட்டர் TSI இன்ஜினாக இருக்கட்டும்; சின்ன 1.0 லிட்டர் TSI இன்ஜினாக இருக்கட்டும்; தயக்கமே இல்லாமல் பவர் டெலிவரி ஆகும் விதம் அருமையாக இருக்கும். 150bhp பவரையும், 250Nm டார்க்கையும் அந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொப்புளிக்கும் ஸ்டைல் சூப்பர். இதில் எனக்குப் பிடித்தது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கும், DSG கியர்பாக்ஸும்தான். ஆனால், மேனுவல் அதையும் தாண்டி! Slick Manner என்பார்களே - அப்படி இதன் மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாகச் செயல்படும் விதம் அப்படித்தான் இருக்கிறது. இதன் ஷார்ட் த்ரோ கார் ஓட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இதன் சிறிய இன்ஜின் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் - இதன் பவர் 115hp மற்றும் 178Nm டார்க். இதை எடுத்துக் கொண்டு நமது மோட்டார் விகடன் டீம் - மும்பையில் இருந்து மஹாபலேஷ்வர் வரை ட்ரிப் அடித்தது மறக்கவே முடியாது. கடல் மேல் அமைந்துள்ள அட்டல் சேது பாலத்தில் டைகூன் 1.0 லிட்டர் பறந்தது - ஜிவ் அனுபவம். சிட்டி டிரைவிங் என்றால், இந்த 1.0 லிட்டர் இன்னும் ஃபன் டு டிரைவ் கொடுக்கிறது. முன் பக்கம் வென்ட்டிலேட்டட் சீட் இருந்ததால், ஜிலு ஜிலுவென்றும் பயணிக்க முடியும்.
இந்த மிட் சைஸ் எஸ்யூவியின் சீட்டிங் பொசிஷன் சூப்பர் சொகுசு. சில கார்களில் தாழ்வான சீட்டிங் பொசிஷன் ஏற்படுத்தி, வெளிச்சாலை விசிபிலிட்டியையும், பயண உற்சாகத்தையும் குலைத்து விடும்படி டிசைன் இருந்துவிடும். டைகூனின் பின் சீட்டுகள் நல்ல உயரமாகவும், முதுகுகளுக்கு நல்ல லம்பர் சப்போர்ட்டுடனும், தொடைகளுக்கான சப்போர்ட்டும் பிரமாதமாகக் கிடைக்கும்படி இருக்கின்றன. இந்தியாவுக்கு ஏற்றபடி இந்தக் காரில் சென்ட்ரல் ஃப்ளோர் ஹம்ப் (Central Floor Hump) -ன் உயரத்தைக் குறைத்திருப்பதால், நெருக்கடியும் தெரியாது. அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வருகிறது. சடர்ன் பிரேக்குகளில் நம் தலைக்குத் தொந்தரவு ஏற்படாது.
Made with Care என்பார்களே… அப்படி இதன் இன்டீரியரில் ஃபின் அண்ட் ஃபினிஷ் சமாச்சாரங்களைச் சொல்லலாம். GT வெர்ஷனில் இதன் சிவப்பு நிற வேலைப்பாடுகள் கண்ணைக் கவர்கின்றன. கிண்ணென்ற பில்லர்கள், ஜெர்மானியத் தரத்தில் உருவான அந்தக் கட்டுமானம்… கதவை மூடும்போதே இதன் உறுதித்தன்மை மட்டும் இல்லை; ஸ்மூத்னெஸ்ஸும் இருக்கும். ஜெர்மன் கார்களின் கதவைத் திறந்து மூடுவதே ஓர் ஆசையைத் தூண்டும் என்றே சொல்லலாம்.
இந்த மிட் சைஸ் எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 188 மிமீ. சில கார்களில் ஹெவி லோடு அடித்தால், தரையோடு தரையாக இறங்கி ஸ்பீடு பிரேக்கர்களில் அடிவாங்கும். டைகூன் அப்படி இல்லை. சில குட்டியான ஆஃப்ரோடு கூட செய்து கொள்ள முடிகிறது. டைகூனை அதிவேகத்துக்கும், ஸ்லோ ஸ்பீடுக்கும், ஆஃப்ரோடுக்கும் ஏற்றபடி வடிவமைத்திருப்பது சூப்பர்.