செய்திகள் :

தோழமை கட்சிகளும் சொல்கிறார்கள் முதல்வரே... போராட்டங்களை அஞ்சி ஒடுக்குகிறதா திமுக அரசு?!

post image

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரகாஷ்காரத், "மத்திய பா.ஜ.க அரசு வகுப்புவாத, மதவெறி கொண்ட அரசாக உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை செயல்படுத்துகின்ற வகையிலேயே அதன்செயல்பாடுகள் உள்ளன. இஸ்லாமியர்களின மசூதிகளின் கீழ்பகுதியில் கோயில் இருந்ததாகக்கூறி, பா.ஜ.க-வினர் கருத்துகளை எழுப்புகின்றனர். இதன் மூலம் மோதலை ஏற்படுத்தும் செயலை அவர்கள் செய்கின்றனர். மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பா.ஜ.க செயல்படுகிறது. இதை ஒடுக்க மதச்சார்ப்பற்ற மக்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

பிரகாஷ்காரத்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் கால் ஊன்ற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் இந்துத்துவாவை திணிக்கப் பார்த்தார்கள். ஆனால், அது அவர்களால் முடியவில்லை. நம் கூட்டணி பலமாக இருந்தது.

மத்திய அரசு தனது தவறான கொள்கைகளை முன்னெடுக்கும் போது, தி.மு.க அதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்காக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அடிப்படை உரிமைக்காக போராடினார்கள். இது இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரைப் பதித்த போராட்டமாக இருந்தது.

முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய தி.மு.க அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்த ஜோதிபாசு, அமெரிக்காவில் தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்ற போது மேற்கு வங்கத்துக்கு தொழிற்சாலைகளை அமைக்க வரலாம். அதேநேரத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று நிபந்தனை அளித்து அதை செயல்படுத்தி வந்தார். அது மிகச் சிறந்த மாடல். அதுபோன்று தி.மு.க அரசும் இருக்கவேண்டும்" என்றார்.

பிறகு மைக் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பா.ஜ.க நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.

கே.பாலகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக தி.மு.க-வுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறுவது ஏன்?. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது" என்றார்.

சேகர் பாபு

இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் பாலகிருஷ்ணன். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும். குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது" என்றார்.

இதற்கிடையில் தி.மு.கவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலி, "தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’ கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.?

முரசொலி கண்டனம்

கூட்டணிக் கட்சி என்பதற்காக போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டியஅவசியம் என்ன வந்தது?

எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால்தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும், மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஆளும் திமுக அரசு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, பாஜக மகளிரணி பேரணி, அதிமுக போராட்டமும் கைதும், பாமக போராட்டமும் கைதும் என பல உதாரணங்களை குறிப்பிடுகிறார்கள் எதிர்க்கட்சியினர். போராட்டங்களை அனுமதிப்பதில்லை, மீறி போராடினால் காவல்துறை கைது செய்கிறது என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு வலுத்த நிலையில் தான் தோழமை கட்சியில் இருந்தும் அதே குரல் வந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் தாண்டி, அதானி ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததாக அறப்போர் இயக்கமும் குற்றம்சாட்டியுள்ளது. இப்படி போராட்டங்களை முடக்குவதன் மூலம், போராட்டங்களை கண்டு திமுக அரசு அஞ்சுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "எமர்ஜென்சி காலத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அப்போது அரசை எதிர்த்தவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அது கே.பாலகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். எனவே எமர்ஜென்சியை தி.மு.க அரசுடன் ஒப்பிட கூடாது. இதை அதிகபட்ச விமர்சனம் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரத்தில் எதிர்கட்சிகளை போராட விடாமல் தி.மு.க அரசு தடுப்பது கண்டிக்கத்தக்கது" என்றார்.

ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. இதனை நீதிமன்றங்களும் பல முறை உறுதி செய்திருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக திமுக அரசு பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிற வேளையில், தங்களுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் முடக்குவது என்பது எத்தகையது என அவர்களே அவர்களுக்கு கேட்டுக்கொள்ளட்டும்!.

"சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது"- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், ``போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்பட... மேலும் பார்க்க

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்... மேலும் பார்க்க

Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பா.ம.க போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெர... மேலும் பார்க்க

'திமுக கூட்டணி வெலலெத்து போயுள்ளது' - தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி் வழங்குகிறது. அதுவே மற்ற கட்... மேலும் பார்க்க

ஆங்காங்கே தென்படும் அறிகுறிகள்... மீண்டும் உருவாகிறதா அதிமுக - பாஜக கூட்டணி?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவானது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி. இந்த கூட்டணி தேர்தலில் வெற்றியை தேடி தரவில்லையென்றாலும், மத்தியில் இருந்து ஆதிக்கம் அதிகமாக இருந்தால்தான், அ.தி.மு.க-வுக்க... மேலும் பார்க்க