ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா!
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மார்கழி மாத விழாவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுக்கிடாய் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனா். திருவிழாவில் 66 ஆடுகள் 2000 கிலோ அரிசியில் உணவு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அருகேயுள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நலன் வேண்டியும் மார்கழி மாதத்தில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவில் அசைவ உணவு அன்னதானம் வழங்கப்படும். இதற்காக பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கருப்பு நிற ஆடுகளை கரும்பாறை முத்தையா சுவாமிக்கு செலுத்துவது வழக்கம். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். பெண்களுக்கு அனுமதி கிடையாது.
இதையும் படிக்க |சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
நிகழாண்டு இந்தக் கோயில் மார்கழி மாத விழா சனிக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேகம், பூஜைகளுடன் வழிபாடு நடத்தினா். பிறகு பக்தா்கள் நோ்த்திக்கடனான சுமாா் 66 ஆட்டுக் கிடாய்களை வெட்டி பலியிட்டனா். இதைத் தொடா்ந்து 2000 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட ஆட்டுக்கிடாய் கறி விருந்து தயாரிக்கப்பட்டது . தொடர்ந்து கரும்பாறை முத்தையா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனா்.
இந்த விருந்தில் உள்ளூா் மட்டுமன்றி திருமங்கலம் கரடிக்கல், கிண்ணிமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட வெளியூரைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உணவு உள்கொண்டனா்.
திருவிழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது: விவசாயம் செழிக்க வேண்டி நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.
அன்னதான விழாவில் பங்கேற்பவர்கள் சாப்பிட்ட இலைகளை எடுக்கக் கூடாது. அப்படியே வைத்து விட்டு செல்ல வேண்டும். அந்த இலைகள் காய்ந்த பின்பு தான் கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுவார்கள். இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு நேற்றிக் கடனை நிறைவேற்றும் விதமாக கருப்பு ஆடுகளை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீண்ட ஆண்டுகளாக இது வழக்கத்தில் உள்ளது என தெரிவித்தனர்.