ஐஎஸ்ஐ முத்திரை குத்திய அமைதி..! யுவன் குறித்து விஷ்ணு வரதன்!
நேசிப்பாயா இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஷ்ணு வரதன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் விஷ்ணு வரதன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை குறித்து பேசியதாவது:
எவ்வளவு அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும் யுவன் மிகவும் பொறுமையாக இருப்பார். எனக்கு உயிரே போய்விடும் அளவுக்கு அழுத்தமாக இருக்கும். யாராவது கிடைத்தால் அடித்து விடலாம் என்றிருக்கும். யுவனோ கண்டுக்கொள்ளவோ மாட்டார். பொறுமையாக இருப்பார். ஆனால், கீப்போர்ட்டில் கை வைத்தால் பின்னிப் பெடலெடுத்து விடுவார்.
ஒரு மனிதர் எவ்வளவு காலம் நடிக்க முடியும்? ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் நடிக்க முடியும். ஆனால், யுவன் அப்படி இல்லை. அசலான மனிதர். ஐஎஸ்ஐ முத்திரை குத்திய அமைதி. அவரைப் பார்த்து நானே மாறிவிட்டேன். யுவன் ஷங்கர் ராஜா ஒரு கேங்ஸ்டர், டிரக் டீலர், என இவையெல்லாம் அவர்தான்.
வெளியேதான் குறைவாக பேசுவார். எங்களிடம் மிகவும் குறும்புத்தனங்கள் செய்வார்.
நான் வெங்கட்பிரபுவிடம் யுவன் எனக்கு மட்டும் நல்ல பாடல்களை தருகிறார். உங்களுக்கெல்லாம் ஏன் தருவதில்லை என்று மாட்டிவிடுவேன். யுவன் மிகவும் ஜாலியான மனிதர் என்றார்.