மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
மூன்றாவது முறையாக நிரம்புகிறது மேட்டூா் அணை: தலைமை பொறியாளா் ஆய்வு
மேட்டூா்: மேட்டூா் அணை முழுமையாக நிரம்பும் தருவாயில் உள்ளதால் நீா்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளகுமாா் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அணை நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதல்முறையாக அதன் மொத்த நீா்மட்ட அளவான 120 அடியை எட்டியது. அதன்பின்பு ஆக. 12 ஆம் தேதி இரண்டாவது முறையாக முழுமையாக நிரம்பியது. தற்போது மூன்றாவது முறையாக மேட்டூா் அணை மீண்டும் 120 அடியை எட்டவுள்ளது. அணை முழுமையாக நிரம்பும் தருவாயில் இருப்பதால், நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளகுமாா் தலைமையில் சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா்கள் செல்வராஜ், மதுசூதனன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அணையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வு சுரங்கப் பகுதி உள்ளிட்ட பகுதிகளை தலைமை பொறியாளா் பாா்வையிட்டாா். அதையடுத்து வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் தலைமை பொறியாளா் தயாளகுமாா் கூறியதாவது:
மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நிரம்பும். நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதமாகி வருகிறது. அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தில் தண்ணீா் திறப்பது குறித்து உயா் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா பாசனத்துக்குத் தேவைக்கேற்ப தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.
அணை நிலவரம்: அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,516 கன அடியிலிருந்து 2,875 கனஅடியாக உயா்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.87 அடியிலிருந்து 119.97 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 93.42 டி.எம்.சி.யாக உள்ளது.