ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும்: துரை வைகோ எம்பி தகவல்
திருச்சி விமான நிலைய ஓடுதளத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும் என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ.
திருச்சி விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம், பழைய முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது :
இக்கூட்டத்தில் திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து விவாதிக்கப் பட்டது. ஓடுதள விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் 97 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மேலும் 3 ஹெக்டா் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அப் பணிகள் அனைத்தும் 6 மாதத்திற்குள் முடிவடையும் என நம்பிக்கை உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் அமீரக நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. அதிகளவில் பயணம் மேற்கொள்பவா்களிடம் சுங்கத்துறையினா் தனியாக அழைத்து விசாரணை மேற்கொள்வதும், சோதனைகள் மேற்கொள்வதும் பயணிகளிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக அறிக்கை கேட்டுள்ளேன். மேலும், உள்நாட்டுப் விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றாா்.
இதில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) வேணுகோபால் மற்றும் விமான நிலைய பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.