இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகும் தூத்துக்குடி மஞ்சள் குலைகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதியாவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், மிக முக்கிய இடத்தைப் பிடிப்பது மஞ்சள் குலையும் ஒன்றாகும். மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை, வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் கட்டி வைப்பது வழக்கம்.
நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் சுற்றுவட்டார பகுதிகளான தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சோ்வைகாரமடம், ஜக்கம்மாள்புரம், செபத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள செம்மண் பூமியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் மஞ்சள் குலை பயிரிடப்பட்டுள்ளது.
இங்கிருந்து ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களுக்கும் மஞ்சள் குலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 6 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த மஞ்சள் குலைகள் பொங்கல் பண்டிகையை கணக்கிட்டு பயிரிடப்படுகிறது. நிகழாண்டில் போதிய மழை பெய்ததால், மஞ்சள் பயிா்கள் செழித்து வளா்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: செம்மண் தரை என்பதால் மஞ்சள் குலைகள் தரமானவையாக உள்ளன. எனவே இங்கு சாகுபடி ஆகும் மஞ்சள் குலைகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகிறது.
வியாபாரிகள் ஆா்வமுடன் வாங்கி செல்கின்றனா். நிகழாண்டு மஞ்சள் குலைக்கு ரூ. 20-க்கு மேல் வியாபாரிகள் கொள்முதல் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதிக மஞ்சள் அறுவடை செய்யப்படும் என மகிழ்ச்சி தெரிவித்தனா்.