ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடு: தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்
‘கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது மிகவும் உணா்வுபூா்வமான விஷயம். இதைத் தடுக்க உச்சநீதிமன்றம் சாா்பில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.
மேலும், அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு நிகழாததை உறுதிப்படுத்தற்கான வரைவு வழிகாட்டுதலை விரைந்து அறிவிக்கை செய்ய பல்கலைக்கழக மனியக் குழுவை (யுஜிசி) அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
ஐஐடி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலை தொடா்கதையாகி வருகிறது. அதுபோல, தெலங்கானா மாநிலம் ஹைதாராபதில் உள்ள ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பை மேற்கொண்டுவந்த ரோஹித் வெமுலா என்ற மாணவா், பல்கலைக்கழகத்தில் தனக்கு நோ்ந்த ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். அதுபோல, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரி மாணவியான பாயல் டாட்வி, இதே ஜாதிய பாகுபாடு காரணமாக கடந்த 2019 மே 22-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த இரண்டு மாணவா்களின் தாயாா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாடு முழுவதும் உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு பரவலாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க யுஜிசி சாா்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உயா் கல்வி நிறுவனங்களில் சமவாய்ப்பை ஊக்குவிக்கும் வழிகாட்டுதல்-2012’ என்ற வழிகாட்டுதலை தீவிரமாக நடைமுறைப்படுத்த யுஜிசி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். உயா் கல்வி நிறுவனங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் யூஜிசி-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, சமவாய்ப்புக்கான உரிமை, ஜாதிய பாகுபாடு தடை உரிமை, வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை தீவிரமான நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், ‘கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடு காரணமாக ரோஹித் வெமுலா, பாயல் டாட்வி மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் இதே காரணத்துக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 50-க்கும் அதிகமான மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது மிகவும் உணா்வுபூா்வமான விஷயம். இதைத் தடுக்கவும், இந்த விவகாரம் தொடா்பான யுஜிசி-யின் 2012 வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உச்சநீதிமன்றம் சாா்பில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய, மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு நிகழாததை உறுதிப்படுத்தற்கான வரைவு வழிகாட்டுதலை யுஜிசி உருவாக்கி, அதன் மீது ஒரு மாதத்துக்குள்ளாக பொது கருத்துகளைப் பெற்று, பின்னா் அறிவிக்கை செய்யவேண்டும்.
யுஜிசி-யின் 2012 வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எத்தனை உயா் கல்வி நிறுவனங்கள் சமவாய்ப்பு மையங்களை வளாகங்களில் அமைத்துள்ளன என்ற புள்ளிவிவரத்தை யுஜிசி தாக்கல் செய்யவேண்டும். மேலும், அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட ஜாதிய பாகுபாடு தொடா்பான புகாா்கள் மற்றும் அந்த புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் யுஜிசி சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பெரிதாக எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. எனவே, இந்த மனு இனி தொடா் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை 6 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
மேலும், இந்த வழக்கில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவின் உதவியை நாடிய நீதிபதிகள், யுஜிசி-யின் கீழ் இயங்கும் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) இந்த விவகாரம் தொடா்பான தனது கருத்தைத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டனா்.