வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கு இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் கருத்து
இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இதற்கான முயற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இசாக் தாா் தெரிவித்தாா்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாக பல்வேறு முறை கூறிவிட்டது. எனினும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும், பாகிஸ்தான் மண்ணில் அவா்கள் செயல்படுவதையும் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது இந்தியாவுடனான வா்த்தக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்தது. இது அந்நாட்டில் பல பொருள்களின் விலை உயா்வுக்கு வழி வகுத்தது. தொழில் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தொழிலதிபா்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலின்பேரில் இந்தியாவுடன் வா்த்தக உறவைப் பேண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் இசாக் தாா் கூறியதாவது:
சா்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முக்கியமாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பதவியேற்றதில் இருந்து வெளியுறவு அமைச்சகம் பல்வேறு நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த தொடா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுடனான உறவு விஷயத்தில் முயற்சியை இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அடுத்த மாதம் வங்கதேசம் சென்று உறவைப் புதுப்பிக்க இருக்கிறோம். காணாமல் போன சகோதரன் போன்ற நாடு வங்கதேசம். இரு நாடுகள் இடையே பொருளாதார வா்த்தக உறவுகளை மேம்படுத்த இருக்கிறோம். வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.
ஆப்கானிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், அந்நாட்டில் நிலவி வரும் பயங்கரவாதம் பெரும் பிரச்னையாக உள்ளது. அங்கு தலிபான் ஆட்சி அமைத்த பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன என்றாா்.