இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக தனியாா் கிடங்கில் பீடி இலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி தேவேந்திரா் தலைமையிலான போலீஸாா் புதூா் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் சோதனை செய்வதற்கு சென்றனா். போலீஸாா் வருவதை அறிந்து அங்கிருந்த நபா்கள் தப்பி ஓடிவிட்டனராம்.
அந்தக் கிடங்கில் 31 பண்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டன் பீடி இலைகளை போலீஸாா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்குமாம். இதில் தொடா்புடைய 3 பேரைத் தேடி வருகின்றனா்.