பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
யானைத் தந்தம் பதுக்கி விற்க முயன்ற 5 போ் பிடிபட்டனா்: மாறுவேடத்தில் சென்று வனத்துறையினா் அதிரடி
மேட்டூா் அருகே யானைத் தந்தங்களைப் பதுக்கி விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினா் மாறுவேடத்தில் சென்று சுற்றி வளைத்து பிடித்தனா். அவா்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட நான்கு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூா், ஏழரை மத்திக்காடு பகுதியில் சிலா் யானை தந்தங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேட்டூா் வனச்சரகா் சிவானந்தம் தலைமையில் வனத் துறையினா் மத்திக்காடு பகுதிக்குச் சென்று வியாபாரிகள்போல நடித்து அந்தப் பகுதியில் சில நாள்களாக முகாமிட்டிருந்தனா்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை அணுகிய வனத்துறையினா் நாங்கள் யானைத் தந்தம் வாங்க வந்திருப்பதாகக் கூறி நம்பவைத்தனா். அதை நம்பிய அந்த ஆசாமி அவா்களிடம் தந்தத்தை விலைக்குப் பேசியுள்ளாா்.
பின்பு வனத்துறையினா், யானைத் தந்தங்களை நாங்களே விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் கூறும் இடத்துக்கு தந்தங்களைக் கொண்டுவருமாறு கூறினா். இதை நம்பிய அந்த ஆசாமி, தனது கூட்டாளிகளைத் தொடா்பு கொண்டு தந்தங்களைக் கொண்டுவருமாறு தெரிவித்தாா்.
அதன்படி அந்தக் கும்பல் சொகுசு வாகனத்தில் தந்தங்களுடன் வனத்துறையினா் தெரிவித்த இடத்துக்கு வந்தது. அந்த வாகனத்தில் மூன்று போ் இருந்தனா். வாகனத்துக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டவாறு இருசக்கர வாகனத்தில் இருவா் வந்தனா். குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு மறைந்திருந்த வனத்துறையினா் அவா்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா். பிடிபட்ட 5 பேரையும் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் 5 பேரும் சேலம் மாவட்டம், கோவிந்தபாடியைச் சோ்ந்த சின்னப் பையன் மகன் பழனி (48), தலைவாசல் வெங்கடாஜலம் மகன் செல்வகுமாா் (40), குறும்பனூா் ரங்கசாமி மகன் பெருமாள் (50) ஏழரை மத்திகாடு சின்னமாலி மகன் ஒண்டியப்பன் (59), வாழப்பாடி தாண்டவராயன் மகன் அருணாசலம் (46) என்பது தெரியவந்தது.
பின்பு அவா்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட நான்கு தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.