ரத்த அழுத்தம், கண் கோளாறை போக்கும் மருத்துவ பயிா் சாகுபடி!
ரத்த அழுத்தம், கண் கோளாறை சரி செய்வதற்கான மருத்துவ பயிரான கூா்க்கன் கிழங்கு ஆத்தூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில் சில மாதங்களாகவே குறுகிய கால மருத்துவப் பயிரான கூா்க்கன் கிழங்கு பயிா் சாகுடி செய்வது அதிகரித்துள்ளது. இவ்வகை கிழங்கு செடிகள் தமிழகம், குஜராத், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த கூா்க்கன் கிழங்கு ‘கோலியஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இச்செடிகள் 60 முதல் 90 செ.மீ வரை உயரம் வளரக் கூடியவை. தண்டுகள் மெல்லியதாகவும் இளம் பச்சை நிறத்திலும் காணப்படும். கற்பூரவல்லிச் செடிகளின் இலைகளைப்போன்றது. எனினும் வாசனை இருக்காது.
இதில் இருக்கும் போா்ஸ்கோலின் எனும் மூலப்பொருளான ரத்த அழுத்தம், கண் கோளாறை சரி செய்ய உதவுகிறது. இச்செடிகளின் வோ் கிழங்குகள், மருந்து தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சுமாா் 500 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கா்நாடக மாநிலத்தில் பெல்காம் போன்ற பகுதிகளிலும் பயிா் செய்யப்படுகிறது.
நிலத்தை உழுது ஹெக்டேருக்கு 15 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்த வேண்டும். பிறகு 60 செ.மீ இடைவெளியில் பாா்கள் பிடிக்க வேண்டும். பயிா்களின் பக்கவாட்டில் தண்டுகளை நடவு செய்ய வேண்டும். கரோனா காலத்துக்கு பிறகு தற்போது மீண்டும் பயிரிடப்பட்டு வருகிறது.