ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
மேல்முறையீடு மனு தாக்கலில் நீண்ட தாமதம்: மத்திய அரசுக்கு சுயபரிசோதனை தேவை - உச்சநீதிமன்றம்
மேல்முறையீடு மனுக்கள் தாக்கலில் நீண்ட தாமதம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தனது சேவைக்காக பணம் வழங்க வேண்டிய நிறுவனம் ஒன்று, தனது ஒப்புதலைப் பெறாமல் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு எதிரான வழக்கில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் என்ஹெச்ஏஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
ஆனால், 295 நாள்கள் தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய மேல்முறையீட்டு தீா்ப்பாயம், மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.
இதை எதிா்த்து என்ஹெச்ஏஐ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மேல்முறையீடு மனு தாக்கலைப் பொருத்தவரை, பெரும்பாலும் 95 சதவீத வழக்குகளில் உரிய கால வரையறை பின்பற்றப்படுகிறது. இந்த கால வரையறையை மத்திய அரசால் மட்டும் ஏன் பின்பற்ற முடியவில்லை? இதில் எங்கோ தவறு இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ஹெச்ஏஐ அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்’ என்றனா்.
இதைக் கேட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்றத்தின் அறுவுறுத்தல் என்ஹெச்ஏஐ தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேல்முறையீடு மனு தாக்கல் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றாா்.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கால தாமதத்தை சுட்டிக்காட்டி என்ஹெச்ஏஐ-யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.