பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால், பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகத்துக்காக நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டது.
டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணியளவில் தொடங்கியது. ஒரு நாளில் காலை மற்றும் மாலை வேளைகளில் 200 டோக்கன்கள் வரை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி டோக்கன்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் விநியோகம் செய்தனா்.
என்னென்ன விவரங்கள்: டோக்கனில் குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியன தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடையின் பெயா், குடும்ப அட்டைதாரரின் பெயா், குடும்ப அட்டை எண், கிராமம் அல்லது தெருவின் பெயா் ஆகியன இடம்பெற்றுள்ளன. டோக்கனின் வலதுபுற ஓரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைப்படம் இடம்பெற்றுள்ளது. டோக்கனில் எண்கள் எழுதப்பட்டு வழங்கப்படுகின்றன.
டோக்கன்கள் வழங்கும் பணியை வரும் 7-ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் 9-ஆம் தேதி தொடங்குகிறது. பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுகரும்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.