Uttar Pradesh: தாய் உட்பட 4 சகோதரிகளைக் கொன்ற அண்ணன்; வீடியோவில் தெரியவந்த அதிர்ச்சிப் பின்னணி!
உத்தரப்பிரதேசத்தில், ஒரு இளைஞர் லக்னோவில் ஒரு ஹோட்டலில் தன்னுடைய தாய் மற்றும் நான்கு சகோதரிகளைக் கொலைசெய்ததற்குப் பின்னால் இருக்கும் காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கொலை நடந்த சில மணிநேரங்களிலேயே போலீஸார், அர்ஷத் (24) என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞரைக் கைதுசெய்தனர். மேலும், விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் தாய் அஸ்மா மாறும் சகோதரிகள் அல்ஷியா (19), ரஹ்மீன் (18), அக்சா (16), ஆலியா (9) என்று தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில், ஏன் கொலை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது என்பது பற்றி அர்ஷத் பேசும் வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில், ``அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தொல்லையால் எங்கள் குடும்பம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. நான் என்னுடைய தாயையும், சகோதரிகளையும் கொன்றேன். இந்த வீடியோவைப் போலீஸ் பார்த்ததும் இதற்கு உள்ளூர்வாசிகளே கரணம் என்று அவர்களுக்குத் தெரியவரும். எங்கள் வீட்டைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் எங்களைத் துன்புறுத்தினர். எதிர்த்துக் குரலெழுப்பினோம். ஆனால், யாரும் கேட்கவில்லை. 15 நாள்களாகக் குளிரில் நடைபாதையில் தூங்கினோம். நில மாஃபியாக்கள் எங்கள் வீட்டைக் கைப்பற்றிவிட்டார்கள். ஆவணங்கள் எங்களிடம்தான் இருக்கிறது.
அவர்கள், ராணு, அஃப்தாப், அலீம் கான், சலீம், ஆரிப், அஹ்மத் மற்றும் அசார். பெண்களையும் விற்கும் இவர்கள், என்னையும் என் தந்தையையும் பொய் வழக்கில் சிக்க வைத்து, என் சகோதரிகளை விற்கத் திட்டமிட்டனர். அது நடக்க விரும்பவில்லை. அதனால், என் சகோதரிகளைக் கழுத்தை நெரித்தும், மணிக்கட்டை அறுத்தும் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தந்தையுடன் நான் இதைச் செய்தேன். எனக்கு வேறென்ன வழி இருக்கிறது. அடுத்த காலை வரை நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம்.
நாங்கள் பூட்டானைச் சேர்ந்தவர்கள். அதற்கான ஆதாரங்கள் என் அத்தையிடம் இருக்கிறது. ஆனால், நாங்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொய் பரப்புகிறார்கள். நாங்கள் பலரிடம் உதவி கேட்டோம். யாருமே உதவ முன்வரவில்லை. இந்தியாவில் எந்த குடும்பத்துக்கும் இந்த நிலை வரக்கூடாது. வாழும்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்கள் மரணத்திலாவது நீதி வழங்குங்கள் என்று கையெடுத்து வேண்டிக்கொள்கிறேன். அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸாருடன் தொடர்பிலிருப்பவர்கள். எங்கள் நிலத்தில் கோயில் வரவேண்டும். எங்களின் உடைமைகளை ஆதரவற்றோர் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். எங்களது கவுரத்தை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். எங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்." என்று முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தார்.
மறுபக்கம், மத்திய லக்னோ காவல்துறை துணை ஆணையர் ரவீனா தியாகி, ``ஹோட்டல் ஷரஞ்சித்தில் கொலைகள் நடந்திருக்கிறது. அர்ஷத் தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் அவரைக் கைது செய்தது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது." என்று தெரிவித்தார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...