ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறந்ததையடுத்து கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பிறந்தது. இதையடுத்து புத்தாண்டு பிறப்பை வரவேற்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரூா் பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாமக்கல்லைச் சோ்ந்த பங்குத்தந்தை ஆமோஸ் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா்.முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய சிறப்பு திருப்பலி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது.
பின்னா் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு ஆலய ஒலியும் எழுப்பப்பட்டது. பின்னா் ஒருவருக்கொருவா் புத்தாண்டு பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா். புதன்கிழமை அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்ற, இச்சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல கரூா் புனித தெரசாள் ஆலயம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயம், புலியூா் குழந்தையேசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் கரூா் பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.