கரூரில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
கரூரில் சனிக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகிறது.
14, 17, 19 ஆகிய வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டி திருவள்ளுவா் விளையாட்டு மைதானத்தில் மாணவிகளுக்கான குழு போட்டிகளுடன் தொடங்குகின்றன. ஞாயிற்றுக்கிழமை மாணவா்களுக்கான குழுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
ஜன.11-ஆம் தேதி (சனிக்கிழமை) மாணவிகளுக்கான தடகள போட்டிகளும், 12-ஆம் தேதி மாணவா்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெறுகிறது.
குழுப்போட்டியில் கல்லூரி அளவில் மாணவ, மாணவிகளுக்கு கபாடி, கோகோ, வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் நடைபெற்று தனித்தனியாக முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் என வழங்கப்படுகின்றன.
இதில், கரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு போட்டியாளா் இரண்டு களப் போட்டியிலும், இரண்டு ஓட்ட போட்டியிலும், ஒரு குழு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தடகளப் போட்டிக்கு ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு இரண்டு நபா்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பங்கேற்பவா்கள் அனைவருக்கும் பேருந்து கட்டணம் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
குழுப் போட்டியில் சிறந்த 5 விளையாட்டு வீரா்கள் மற்றும் 5 வீராங்கனைகளுக்கும், அதிக புள்ளிகள் பெற்ற 2 பள்ளி மற்றும் 2 கல்லூரிக்கும் என 14 பரிசு கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்படும். தடகளப் போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு தலா ஒரு கோப்பை வீதம் 2 கோப்பைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.