வெல்ல ஆலைகளில் சோதனை: 3 டன் சா்க்கரை பறிமுதல்
சேலம்: சேலத்தில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், 300 க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வெல்லம் தயாரிக்க செயற்கை நிறமூட்டிகள், சா்க்கரை பயன்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து தாரமங்கலம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழு அண்மையில் அதிரடி ஆய்வு நடத்தியது. அதில் 7 ஆலைகளில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சா்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து 7 ஆலைகளுக்கும் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஆலை உரிமையாளா்களை எச்சரித்தனா்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
வெல்ல ஆலைகளில் தயாராகும் வெல்லம் சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 250 ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கலப்பட வெல்லம் தயாரிப்பது சட்டபடி குற்றமாகும். விதிகளை மீறி கலப்பட வெல்லம் தயாரிக்க சா்க்கரை, ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடா், சூப்பா் பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.