Rohit Sharma : ``விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" - ரோஹித் சொன்ன விளக்கம்
பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என கணிப்புகள் வெளியானது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் இப்போது பேசியிருக்கிறார்
சிட்னி மைதானத்தில் பேட்டியளித்த ரோஹித், ``நானேதான் இந்தப் போட்டியிலிருந்து விலகினேன். பயிற்சியாளரோடும் தேர்வுக்குழுவினரோடும் என்னுடைய உரையாடல் எந்த சிக்கலுமற்றதாக இருந்தது. இது முக்கியமான போட்டி. இந்த சமயத்தில் நான் ஃபார்மில் இல்லை எனும்போது ஃபார்மில் இருக்கும் பேட்டர் ஆட வேண்டியது அணியின் தேவையாக இருக்கிறது. அதைத்தாண்டி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை . சிட்னிக்கு வந்தபிறகுதான் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன். அணியிலிருந்து நான் விலகியிருப்பது தேவையான விஷயம் என்கிற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பெர்த்தில் நாங்கள் வென்றதற்கு ஓப்பனர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் மிக முக்கிய காரணமாக இருந்தது.
200 ரன்களுக்கு மேல் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அடுத்த 6 மாதங்களில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. நிகழ்காலத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் போட்டியிலிருந்து விலகியிருக்கிறேன், அவ்வளவுதான். இது ஓய்வு பெறும் முடிவெல்லாம் அல்ல. வாழ்க்கையில் எல்லாமும் அன்றாடமும் மாறிக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், நிகழும் யதார்த்தங்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறேன். நான் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியும்.
அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த வீரராக இருக்க வேண்டும். அணியை பற்றி யோசிக்காத வீரர்கள் அணிக்குத் தேவையே இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய கரியர் முழுவதும் இதே எண்ணத்துடன்தான் ஆடியிருக்கிறேன். வெளியே இருக்கும் நிறைய பேர் நம் மீது விமர்சனங்களை வைக்கக்கூடும். ஆனால், ஒரு போதும் எனக்கு என்மீது எந்தவித சந்தேகமும் குழப்பமும் இருந்ததில்லை. நான் எங்கேயும் செல்லப்போவதில்லை. இங்கேயேதான் இருக்கப்போகிறேன்." எனப் பேசியிருந்தார்.
ரோஹித் சர்மாவின் இந்தக் விளக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!