மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
திருச்சி: 'மாநகராட்சியோடு சேர்க்க கூடாது’ - சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்
தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மணிகண்டம், அந்நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பழனியாண்டி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
300 பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து திரண்டனர். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீஸார் அங்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அவர்கள் திருச்சி வயலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், கரூர் மாவட்டம், தோகைமலையில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், திருச்சி – வயலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் மறியல் செய்தவர்களில் சுமார் 300 பேரை கைது செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இன்னொருபக்கம், இந்தப் போராட்டத்தை தலைமையேற்று, பழனியாண்டி வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்ப்பற்றது) மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரையை அவரது வீட்டிலேயே போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மக்களை வயலூர் ராஜா திருமண மண்டபத்திற்கு போலீஸார் வாகனங்களில் அழைத்துச் சென்றனர். திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்திருப்பது, திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.