Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி ...
பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்; எல்லாமே அரசு செய்யமுடியாது - மதுரை ஆதீனம்
"ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும்" என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடந்த வீரபாண்டியன் கட்டபொம்மன் விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தமிழ்நாடு முழுக்க பிரச்னை ஆகிக் கொண்டிருக்கிறதே" என்ற கேள்விக்கு,
''அதற்கு நீங்கள் என்ன பண்ண போறீங்க?" என்று ஆதீனம் எதிர் கேள்வி கேட்டார்.
"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குஷ்பு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?" என்றதற்கு,
"அதைப்பற்றி எனக்குத் தெரியாது, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக இப்போது வந்திருக்கிறேன். அதைப்பற்றி சொல்ல முடியாது" என்றார்.
"தமிழ்நாடில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்களே, இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று சொல்லுங்கள்...?"
"ஏன் நீங்களெல்லாம் நல்லாத்தானே இருக்கீங்க." என்றார்.
"இப்போதைய சூழலில் இளைஞர்கள், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிறீர்கள்?"
"இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி வீரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும், பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும். பெற்றோருக்குத்தான் பொறுப்பு உள்ளது, என்னையும்தான் பெற்றோர்கள் கட்டுப்பாடாக வளர்த்தார்கள். அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கடுப்பாடாக வளர்க்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளத்தன் கல்லூரிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம்" என்றார்.
"மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுகவும் ஆளவேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள், ஆனால், திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறாரே?"
" அது அவர் கருத்து, அவர்கள் கலைஞருக்கு நாணயம் வெளியிடவில்லையா? பல திமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லையா..?" என்றவர், பிறகு, "நான் இங்கே வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செய்ய வந்திருக்கிறேன். பாஞ்சாலக்குறிச்சிக்கு பக்கத்து ஊர்க்காரன் நான், அரசியல் பேச வரவில்லை... ஏதாவது அரசியல் சாயம் பூசி ஒரு வாரத்துக்கு என்னை வைத்து வறுத்து எடுக்கக்கூடாது" என்று கூறிவிட்டு கிளம்பினார்.