2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
`திமுக வெளிச்சத்தில் நாங்கள் இருக்கிறோமா?’ - முரசொலியை சாடும் மா.கம்யூனிஸ்ட் பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த கே. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும், தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுடைய பல்வேறு பிரச்னைகள் குறித்தும் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த முக்கிய பிரமுகர்களுடன் விவாதிக்கப்பட்டது.
அது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் அனைத்தும் படிப்படியாக செயல்வடிவம் பெறும். மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் பார்ப்பது, மாநில அரசியல் சாசனங்கள் வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளுக்கு மாறாக தொடர்ந்து ஈடுபட்டு வருவது போன்ற மதவெறி பா.ஜ.க ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டங்களை முன்னெடுக்கும்.
தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக வேலை வாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் உருவெடுத்துள்ளது. அனைவருக்கும் வேலை வழங்குவோம் என்று சொன்னது ஒன்றிய பா.ஜ.க அரசு. ஆனால் வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பி, வேலை வாய்ப்பை பறிக்கும் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள். நிரந்தர வேலை வாய்ப்புக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். நிரந்தரப் பணி என்பது இனி அரசுத் துறைகளில் இருக்காது. மிக மோசமான பொருளாதாரக் கொள்கையை பா.ஜ.க அரசு கடைப்பிடிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத வெறி சக்திகளை எதிர்ப்பதில் தி.மு.க-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும். போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை.
அந்த அடிப்படை உரிமையை பறிக்க எந்த அரசுக்கும் அதிகாரமில்லை. எங்கள் மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாலகிருஷ்ணன் எங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார். தி.மு.க அரசு அதை புரிந்துகொள்ளும். தி.மு.க-வுடன் பலமுறை நாங்கள் உறவோடும், எதிர் அணியிலும் இருந்திருக்கிறோம். தி.மு.க ஆதரவால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கிறது என்பது அதீத கருத்து. மக்கள் பிரச்னைக்காக போராடுவதால்தான் அவர்கள் மத்தியில் மார்க்சிஸ் கட்சி வலுவாக இருக்கிறது. தி.மு.க வெளிச்சத்தில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக அந்த கட்சி தலைமை கூறியிருப்பது சரியல்ல. அதை முரசொலியில் கூறியிருப்பதும் பொருத்தமானதல்ல’’ என்றார்.