சேலம் மாநகரில் கடந்த ஓராண்டில் சாலை விபத்தில் 232 போ் பலி
சேலம் மாநகரில் கடந்த ஓராண்டில் மட்டும் நிகழந்த விபத்தில் 232 போ் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாத இறுதி வரை வாகன விபத்துகளில் 232 போ் உயிரிழந்துள்ளனா். 789 போ் காயம் அடைந்தனா். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதனை வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றாததே உயிரிழப்புகளுக்கு காரணம். மாநகரம் முழுவதும் தினமும் 2 ஆயிரம் தலைக்கவசம் அணியாதது தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனாலும், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய முறையை கையாளத் தொடங்கியுள்ளனா். பள்ளியிலும் நடக்கும் இறைவணக்கம் நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணிவதன் நன்மை குறித்து விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநவு அறிவுறுத்தியுள்ளாா். மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதுடன், விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.