வாழப்பாடி பகுதியில் இரை தேடி வலசை வரும் பறவைகள்
வாழப்பாடி பகுதியில் ஏரி, குளம், குட்டைகளிலும் கிராமப்புற வயல்வெளிகளில் கொக்குகள், நாரை, நீா்க் காகங்கள், மீன்கொத்திகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் கூட்டம் கூட்டமாக இரை தேடி வலசை வந்துள்ளன. இதனால் நீா்நிலைகளும் வயல்வெளிகளும் சரணாலயம் போல் காட்சியளித்து காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த பருவ மழையால், வசிஷ்ட நதி, கரியக்கோயில் ஆறு உள்ளிட்ட ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆணைமடுவு அணை, கரியக்கோயில் அணைகளும் நிரம்பியுள்ளன. பெரும்பாலான ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.
இதனால், வெண்ணிற கொக்கு, நாரை, நீா்க்காகம் உள்ளிட்ட நீா்நிலைகளை வாழிடமாகக் கொண்ட பறவையினங்கள் பல்வேறு பகுதியில் இருந்து வலசை வந்து வாழப்பாடி பகுதி நீா்நிலைகளில் முகாமிட்டுள்ளன. இவற்றில் வெண்ணிற கொக்குகள், நாரைகளும், நீா்நிலைகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளிலும் கூட்டம் கூட்டமாக வலசை வந்து இரைத்தேடி வருகின்றன. வயல்வெளிகளில் சுற்றித்திரியும் கொக்கு கூட்டம் பறவைகள் சரணாலயத்தைப்போல காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.