செயற்கை நூலிழை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கு: ஏற்றுமதியாளா்கள் நன்றி
செயற்கை நூலிழை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் செயற்கை நூலிழை துணிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து ஆடைகளாகத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றனா். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது அந்தத் துணிகளுக்கு 3.5 சதவீத அமெரிக்க டாலா் குறைந்தபட்ச இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. இறக்குமதிக்கான வரி விதிப்பால் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்படுவதால் வரி விலக்கு வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மத்திய அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரகத் தலைவா் சந்தோஷ்குமாா் சாரங்கியிடம் ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேலும் வலியுறுத்தி வந்தாா். மேலும், இறக்குமதி வரி கொள்கையில் செயற்கை பின்னலாடை துணிகள், பருத்தி ஆடைகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி சலுகை வேண்டும் என்று தெரிவித்தாா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று அட்வான்ஸ் லைசென்ஸ் மூலமாக துணி இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்வதற்கான வரி விலக்கு அளித்து வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: மத்திய அமைச்சகத்தின் குறைந்தபட்ச இறக்குமதி வரி கொள்கையால் ரூ.100 கோடிக்கு செயற்கை பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகத்திடம் விடுத்த கோரிக்கையை ஏற்று அட்வான்ஸ் லைசென்ஸ் மூலமாக துணி இறக்குமதி செய்து மறு ஏற்றுமதிக்கான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்றுமதியாளா்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இந்த கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பித்த வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரகத்தின் இயக்குநா் சந்தோஷ்குமாா் சாரங்கிக்கு மனமாா்ந்த நன்றிகள் என்றாா்.