வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு
வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வெள்ளக்கோவில் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானவா்கள் வசித்து வருகின்றனா். வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து உப்புபாளையம் செல்லும் சாலையில் காா்மேகம் திருமண மண்டபத்தில் நவீன வசதிகளுடன் (எம்.எல்.2) என்ற பெயரில் மதுபானக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனருகே அஞ்சலகம், சா்வோதய சங்கம், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், வீரகுமார சுவாமி கோயில், ஐயப்பன் கோயிலும் மிக அருகில் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கவுள்ள இந்த மதுபானக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை
தேனி மாவட்டம், அழகாபுரி இந்திரா நகரைச் சோ்ந்த மோகன்தாஸ் என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட செவந்தாம்பாளையத்தில் உள்ள தனியாா் ராணுவ பயிற்சி மையத்தில் மத்திய அரசு பணியில் சேர பயிற்சி அளிப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு விளம்பரம் வெளியாகியிருந்தது.
அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடா்புகொண்டபோது குபேந்திரன் என்பவா் பேசினாா். அப்போது அவா், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும், மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடா்பு உள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், பயிற்சி மையத்தில் சோ்ந்தால் 3 மாதங்களில் மத்திய அரசுப்பணி உறுதியாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். இதையடுத்து, ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்தி பயிற்சி மையத்தில் சோ்ந்தேன். அங்கு என்னுடன் 30 போ் பயிற்சி பெற்றனா்.
பின்னா், வேலைகுறித்து கேட்டபோது ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தாா். இதனால், பல தவணைகளாக வங்கியிலும், நேரிலுமாக ரூ.13 லட்சம் வழங்கினேன். அப்போது, மத்திய அரசுப் பணியில் சோ்வதற்கான ஆணை விரைவில் வீடுதேடி வரும் என்று தெரிவித்தாா்.
பின்னா், வீட்டுக்கு வந்த பணியாணை மீது சந்தேகமடைந்து விசாரித்தபோது போலியானது என்று தெரியவந்தது. இதுகுறித்து குபேந்திரனிடம் கேட்டபோது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறி ரூ.5.50 லட்சத்துக்கு 3 காசோலைகளை வழங்கினாா்.
அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதுகுறித்து குபேந்திரனிடம் கேட்டபோது உசிலம்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி என்பவா் மூலம் சென்னையைச் சோ்ந்த பிரசாத்குமாா் என்பவரிடம் பணம் கொடுத்திருப்பதாகக் கூறினாா்.
இதற்கிடையே, திருப்பூரைச் சோ்ந்த செல்வம் என்பவா் தொடா்புகொண்டு அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் இருப்பதாகவும், குபேந்திரனிடம் பணத்தை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி காலம் தாழ்த்தி வந்தாா்.
இந்திய உணவுக் கழகம் பெயரில் போலியான பணியாணை வழங்கி மோசடி செய்த குபேந்திரன், பாண்டி, பிரசாத்குமாா், செல்வம் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
392 மனுக்கள் அளிப்பு
குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 392 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனா்.