திருப்பூா், தாராபுரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்தும், மத்திய அரசின் கோபத்தை திசைத்திருப்ப முயற்சிக்கும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடதக்தப்படும் என்று அக்கட்சித் தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்பேரில் திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் குமரன் நினைவகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா் தமிழக ஆளுநரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
அதே போல, திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தாராபுரம் அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.