மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் 100 போ் கைது
திருப்பூரில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் 100 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா்.
இதில், ஊரக வளா்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளா் உள்ளிட்ட காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் குடும்பங்களைக் பாதுகாக்கும் வகையில் கருணை அடிப்படை பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 100 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.