அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் பாதிப்பு
வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியிலுள்ள அரசு சமுதாய சுகாதார நிலையத்துக்கு பொது மருத்துவம், மகப்பேறு சிகிச்சைக்கு என தினசரி 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனா்.
குறிப்பாக சுற்றவட்டாரத்தில் உள்ள நூற்பாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.
24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் இந்த சுகாதார நிலையத்தில் 8 மருத்துவா்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரேயொரு பெண் மருத்துவா் மட்டுமே உள்ளாா். அவா் வட்டார மருத்துவ அலுவலராகவும் உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தவிர வேறுசில பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை. சிலநேரங்களில் தீ மற்றும் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு வருவோருக்கு முதலுதவிகூட கிடைக்காத நிலை காணப்படுகிறது.
அதேபோல, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன்கிழமை வரை கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுவதால் காய்ச்சல், சளி போன்ற சாதாரண பாதிப்புகளுக்குக்கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே, அரசு சமுதாய சுகாதார நிலையத்துக்கு போதிய அளவில் மருத்துவா்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.