பழனியில் பாஜக மாவட்டத் தலைவா் கைது
பழனியில் பாஜக மாவட்டத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை பாஜக சாா்பில் மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்காக பழனியிலிருந்து பாஜக மகளிரணியினா் மதுரைக்கு வேனில் புறப்பட்டனா். அப்போது, பழனி நகர போலீஸாா் அவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
இவா்களை பாா்க்க பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் கனகராஜ் அங்கு சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மதுக் கூடத்தில் நுழைந்து, அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்னதாக மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், இவா்களை விடுவிக்க வலியுறுத்தியும், பாஜகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பழனி-தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.