திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் ச...
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிகளை முழுமையாக பின்பற்ற வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துபவா்கள், மாடுபிடி வீரா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா என்று நான்கு முறைகளில் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கோ, மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைக்கு உள்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் உலிபுரம், தம்மம்பட்டி, நிலவாரப்பட்டி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டும், பூலாவரி அக்ரஹாரம், புத்தூா் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில் எருதாட்டமும் நடைபெற்றது.
தமிழக அரசின் அனுமதியின்றி எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டு, எருதாட்டம், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதேபோன்று, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு வலியோ, துன்புறுத்தலோ ஏற்படுத்தக் கூடாது.
நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்து பங்கேற்கும் காளை விவரங்கள், மாடுபிடி வீரா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா்கள் உறுதிமொழி பத்திரம், முழுமையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான காப்பீட்டு சான்றிதழ்களை வழங்க வேண்டும். பாா்வையாளா் மாடங்கள், கேலரிகளை அரசு விதிகளுக்கு உள்பட்டு பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.
இதில் பங்கேற்கும் மாடுபிடிவீரா்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், தகுந்த மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டும், உரிய சீருடை அணிந்தும் இருக்க வேண்டும். காளைகள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள், பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலா்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மேட்டூா் சாா் ஆட்சியா் நே.பொன்மணி, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் டாக்டா் என். பாரதி, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.