மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
திருப்பூரில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.
திருப்பூா், குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (45), இவா் சொந்தமாக பின்னலாடை லேபிள் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில், அவா் வீட்டின் படிக்கட்டில் கடந்த டிசம்பா் 31- ஆம் தேதி தவறி விழுந்துள்ளாா்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவா் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.
சத்யநாராயணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதனடிப்படையில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கண்கள் தனியாா் மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
திருப்பூா் அரசு மருத்துக் கல்லூரி முதல்வா் முருகேசன், இருப்பிட மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவக் குழுவினா், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரன் உள்ளிட்டோா் சத்யநாராயணனின் உடலுக்கு அரசு மரியாதை செய்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.