சேலம் மாமங்கத்தில் இணைப்பு பாலம் கோரி நெடுஞ்சாலை அலுவலகம் முற்றுகை
சேலம், மாமங்கம் பகுதியில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில் இணைப்பு பாலம் அமைத்து தரக் கோரி, எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டு மாமாங்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாலம் கட்டப்படுகிறது. அதற்கு இணைப்பு பாலம் அமைக்கக் கோரி மக்களுடன் இணைந்து அருள் எம்எல்ஏ குரங்குச்சாவடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டாா்.
அப்போது, பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்எல்ஏ அருள் உள்ளிட்டோரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த சேலம் நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநா் சீனிவாசலு, அருள் எம்எல்ஏவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இணைப்பு பாலம் அமைப்பது குறித்து வரைபடம் தயாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிடுவதாக இரா.அருள் தெரிவித்தாா்.
இதுகுறித்து எம்எல்ஏ இரா. அருள் கூறியதாவது:
1 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாமாங்கம், அண்ணாநகா், அமராவதி நகா், சின்னமோட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இணைப்பு பாலம் வேண்டும் என நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவா்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனா். ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில பசுமைத் தாயகம் இணை செயலாளா் சத்ரியசேகா், மாவட்ட மகளிா் அணி கிருஷ்ணாம்பாள், சின்னத்தம்பி உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.