கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம்? ஆடுகள் இறப்பால் வனத்துறையினா் ஆய்வு
கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் ஏதுமில்லை என வனச்சரக அலுவலா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கொல்லிமலை குழிவளவு, நத்துக்குழிப்பட்டி பகுதியிலும் பட்டியில் உள்ள ஆடுகள் சில வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன.
சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகினா். கொல்லிமலை வனச்சரக அலுவலா் சுகுமாா் தலைமையில் வனக்காப்பாளா்கள், மலைப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா, கால் தடப்பதிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனா். ஆனால் அதுபோன்று எந்த பதிவும் தென்படவில்லை. செந்நாய் மற்றும் நாய்கள் தாக்குதலால் ஆடுகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் கூறியுள்ளதாவது: ஆடுகள் இறப்புக்கு சிறுத்தை காரணமாக இருக்க வாய்ப்பில்லை. சிறுத்தை கடித்தால் இழுத்து விட்டு செல்லுமே தவிர அங்கேயே விட்டு விட்டு செல்லாது. செந்நாய் அல்லது நாய்கள் தாக்குதலாக இருக்கலாம். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.