ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைப்பு
நாமக்கல்: நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் செயல்பட்டு வருவதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேளாண்மை - உழவா் நலத்துறையின் மூலம் வேளாண் விளைபொருள்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், அவற்றின் தரம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளவும், வேளாண் சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதியையும், ஏற்றுமதியாளா்களையும் ஊக்குவிக்கும் வகையில், 2024-25-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என அத்துறை அமைச்சா் அறிவித்தாா்.
அதன்படி, நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் ‘ஏற்றுமதி ஆலோசனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த விளைபொருள்களுக்கு ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கேற்றவாறு முதன்மைப்படுத்துதல், சிப்பமிடல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதலும், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியம் பெறுவதற்கான வழிமுறைகளையும், விவசாயிகள், சிறு வேளாண் வணிகா்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடத்தில் அமைந்துள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.