பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 5.40 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழா் திருநாளான தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், 730 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் என மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனை மக்கள் பெறுவதற்கு ஏதுவாக ஜன. 3 முதல் 8-ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் டோக்கன் வழங்க உள்ளனா்.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஜன. 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்படும் விவரங்களின்படி, குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.