Kohli யோட 'Fear of Failure' Mind Set மாறினாலே போதும்! - Commentator Nanee Interv...
மேல்மருவத்தூா் சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்
நாமக்கல் அருகே மேல்மருவத்தூா் சென்று திரும்பிய பேருந்து சாலையோரம் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பக்தா்கள் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே நவணி ஊராட்சி இலக்கியம்பட்டி கிராமத்திலிருந்து 25 போ் தனியாா் பேருந்தில் மேல்மருவத்தூருக்குச் சென்றனா். அங்குள்ள ஆதிபராசக்தி கோயிலில் தரிசனத்தை முடித்து வீடு திரும்பிய போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலை நவணி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்த வழியாக வந்தோா் காயமடைந்தவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களை நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு பெண் மட்டும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.